உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேம்பால பணிக்கு இடையூறான பாறைகள் பெயர்த்து அகற்றும் பணிகள் தீவிரம்

மேம்பால பணிக்கு இடையூறான பாறைகள் பெயர்த்து அகற்றும் பணிகள் தீவிரம்

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பகுதியில், இடையூறாக உள்ள பாறைகளை,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக பெயர்த்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.மேலும் ஆப்பூர் திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வர, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதையடுத்து, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 2008ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தால் ரவுண்டானா அமைக்கும் திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன.தொடர்ந்து, 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்றதும், நவம்பரில் மீண்டும் பூமி பூஜை போடப்பட்டு, 138.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பால பணிகள் துவக்கப்பட்டன.பணிகள் வேகமாக நடைபெற்று, ஒரகடம் பகுதியில் தாம்பரம் மார்க்கமாக செல்லும் வகையில், ஒரு பக்கம் மட்டும் மேம்பாலம் கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்டது.தற்போது ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் மார்க்கத்தில் இருந்து ஒரகடம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல ரவுண்டானாவும், செங்கல்பட்டு மார்க்கத்திலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.ஜி.எஸ்.டி., சாலை மேம்பாலத்தின் இறங்கு பகுதி அமைய உள்ள இடத்தில், 50 மீட்டர் வரை பெரிய பெரிய பாறைகள் உள்ளன.இவை மேம்பாலம் அமைக்கவும், சாலை அமைக்கவும் இடையூறாக இருந்து வந்தன. தற்போது இந்த பாறைகளை,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அனைத்து பணிகளும் இந்த மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து, இந்த மார்க்கத்திலும் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை