உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அழிந்துவரும் ராப்டர்ஸ் பறவைகள் பாதுகாக்க வண்டலுாரில் பயிலரங்கு

அழிந்துவரும் ராப்டர்ஸ் பறவைகள் பாதுகாக்க வண்டலுாரில் பயிலரங்கு

வண்டலுார்:அழிந்துவரும் 'பிடியான்' எனும் 'ராப்டர்ஸ்' பறவை இனங்களை பாதுகாப்பது குறித்த பயிலரங்கு, வண்டலுாரில் நடந்தது. உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் கழுகு, பருந்து, ஆந்தை உள்ளிட்ட பறவை இனங்களை, 'பிடியான்' எனும் 'ராப்டர்ஸ்' வகை பறவை இனங்களாக, உலக உயிரியல் துறை வகைப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கடலோர ஈர நிலங்களில், பிடியான் பறவைகள் அதிகம் வசிக்கின்றன. பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமநிலைக்கு இந்த பறவை இனங்கள் உதவுகின்றன. மனிதர்களால் வேட்டையாடப்படுதல், காலநிலை மாற்றம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் உள்ளிட்ட காரணங்களால், இந்த பறவை இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக அளவில் 18 சதவீத பிடியான் பறவை இனங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும், 52 சதவீத பறவை இனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பிடியான் பறவை இனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாத்தல், சட்ட பாதுகாப்பு, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை மையப்படுத்துதல் குறித்து, ஒரு நாள் பயிலரங்கு நேற்று நடந்தது. வண்டலுாரில் இயங்கி வரும் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் நடைபெற்ற இந்த பயிலரங்கில், கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் மற்றும் முதன்மை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பிடியான் பறவை இனங்களை பாதுகாப்பது, ஆய்வுகளை மேற்கொள்ளல், வன விலங்கு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், விவாதங்களும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை