| ADDED : நவ 28, 2025 04:06 AM
சென்னை: சர்வதேச டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், '5வது உலக யூத் சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்' போட்டிகள், ரோமானியா நாட்டின் நப்போகா நகர் பகுதியில், இம்மாதம் 23ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் 12 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர் மற்றும் குழு என, 15 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஆண்களில் 19 வயதுக்குட்பட்டோர் குழு பிரிவில் போட்டியிட்ட இந்திய அணியில், சென்னையின் அபினந்த், இடம் பெற்றிருந்தார். இந்திய அணி, அரையிறுதி போட்டியில் சீனாவின் தைப்பே அணியை 3 - 2 என வென்று, இறுதி போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இதன் இறுதி சுற்றில் சென்னையின் அபினந்த், ஜப்பானின் கசூகி யோஷியாமாவை எதிர்த்து களம்கண்டார். இதில் அபினந்த் 7 - 11, 8 - 11, 6 - 11 என்ற செட் கணக்கில் கசூகியிடம் வீழ்ந்து, இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். இதன், மகளிர் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சென்னையின் அனன்யா முரளிதரன், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.