குடிநீர் வினியோகம் பாதிப்பு ஜமீன்புதுார்வாசிகள் மறியல்
செய்யூர்:செய்யூர் அடுத்த ஜமீன்புதுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.குடிநீர் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இப்பகுதி மக்களுக்கு, நல்லுார் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது.இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, குறைந்த மின்னழுத்தம் காரணமாக 'டிவி', மிக்ஸி, பிரிஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.மின் மோட்டாரை இயக்க முடியாததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை 11:00 மணியளவில் கிராமவாசிகள், நல்லுார் துணை மின் நிலையம் முன், செய்யூர் -- போளூர் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.அதன் பின், குறைந்த மின்னழுத்த பிரச்னை சீரமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.