செங்குன்றம் : தங்களுக்குரிய இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த ஒருவர், வேறு சிலருக்கு விற்க முயற்சிப்பதை கண்டித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள் கோஷமிட்டனர். சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் அருகே உள்ளது ஒரக்காடு கிராமம். 1964ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் நரிக்குறவ சமுதாய மக்களுக்காக 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். அந்த நிலம் ஒன்பது கூட்டு பட்டா மூலம் அங்கிருந்த 25 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிலையில் அச்சமுதாய மக்களுக்கு அறிமுகமான ரகுபதி என்பவர், 33 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாகவும், அதில் பத்து ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலருக்கு விற்க முயற்சிப்பதாகவும் புகார் எழுந்தது.
இது பற்றிய புகாரை, தமிழ்நாடு நரிக்குறவர் பழங்குடி இன மக்கள் சமுதாய சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் தேவதாஸ், பொதுச்செயலர் இந்திரா ஆகியோர் மாவட்ட ஆட்சித்துறை, போலீஸ் நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார்கள் அளித்துள்ளனர். இந்நிலையில், நேற்று செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், தங்களது நிலத்தின் மீதான பொது அதிகார பத்திரம் அல்லது கிரையப்பத்திரம் செய்யப்படுதாக தகவல் அறிந்தனர். இதையடுத்து, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குவிந்தனர்.
சங்கத் தலைவர் தேவதாஸ் மற்றும் பொதுச் செயலர் இந்திரா தலைமையில், அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ரகுபதி என்பவரை எதிர்த்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவரம் சேகரித்தனர். அதன்பின் நரிக்குறவர்கள் தங்களுக்குரிய இடங்கள், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்படுவதை தடுக்க வேண்டுமெனபத்திரப்பதிவு அலுவலக அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.