உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி அருகே 25 ஏக்கர் அரசு நிலம் மீட்பு ரூ.500 கோடி! முன்மாதிரி பள்ளி, கல்லுாரி அமைக்க திட்டம்

பூந்தமல்லி அருகே 25 ஏக்கர் அரசு நிலம் மீட்பு ரூ.500 கோடி! முன்மாதிரி பள்ளி, கல்லுாரி அமைக்க திட்டம்

பூந்தமல்லி, :தனியார் கல்வி அறக்கட்டளை நிர்வாகம், 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று கூடுதலாக ஆக்கிரமித்திருந்த 20 ஏக்கர் நிலத்தை, பூந்தமல்லி வருவாய் துறையினர், நேற்று அதிரடியாக மீட்டனர். 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிலத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடங்களை இடித்து அகற்றாமல், அரசு சார்பில் முன்மாதிரி பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை அமைக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சென்னை அடுத்த, பூந்தமல்லி ஒன்றியம் செம்பரம்பாக்கம் ஊராட்சி பழஞ்சூரில், சென்னை ---- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், அரசுக்கு சொந்தமான புஞ்சை அனாதீனம் நிலம் 25 ஏக்கர் உள்ளது.இதில் சர்வே எண்: 371/1ல் 5 ஏக்கர் நிலத்தை, செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை, 1993 முதல் 2013ம் ஆண்டு வரை, 20 ஆண்டு குத்தகைக்கு பெற்றது.குத்தகையாக பெற்ற நிலத்தில் 'இன்டர்நேஷ்னல் ரெசிடன்சி' பள்ளியை துவக்கியது. பல மாநிலங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இங்குள்ள விடுதிகளில் தங்கி பயின்று வந்தனர்.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பள்ளி மூடப்பட்டது. மாணவர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தோர் என்பதால், இப்பள்ளியில் மீண்டும் பயில தயக்கம் காட்டினர்.அதேசமயம், குத்தகை தொகை 23 கோடி ரூபாய் நிலுவை இருப்பதும், குத்தகை காலம் முடிந்ததும், மாவட்ட வருவாய் துறையினருக்கு தெரியவந்தது.இதையடுத்து, அங்கு ஆய்வுக்கு சென்றபோது, குத்தகை இடத்தின் அருகே உள்ள 20 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிமிரத்து பள்ளி கட்டடங்கள், விடுதிகள், அலுவலகம், குடியிருப்பு, நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்கள் அமைத்திருந்ததும் தெரிந்தது.இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அதன் அறக்கட்டளைக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.ஆனால் அறக்கட்டளை நிர்வாகம், குத்தகையை நீடிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணைக்கு பின், 'அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக நில நிர்வாக ஆணையர் 2020ம் ஆண்டு குத்தகையை ரத்து செய்தார்.தொடர்ந்து, அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, கடந்த ஜன., 3ம் தேதி, அறக்கட்டளை நிர்வாகத்திற்கு, வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அகற்றுவதற்காக அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், கல்வி அறக்கட்டளை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.இந்நிலையில், பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையிலான வருவாய் துறையினர், பழஞ்சூர் பகுதிக்கு நேற்று சென்றனர். தனியார் கல்வி அறக்கட்டளையிடம் ஆக்கிரமிப்பில் இருந்த 25 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். பள்ளி நுழைவாயில் இரும்பு கேட்டை இழுத்து பூட்டி 'சீல்' வைத்து, அரசு உடைமையாக்கினர்.இது குறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:தனியார் கல்வி அறக்கட்டளையிடம் இருந்து மீட்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய். இங்குள்ள கட்டடங்கள் நல்ல முறையில் உள்ளன.அவற்றை இடித்து அகற்ற போவதில்லை. மாறாக, இப்பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி, அங்கு முன்மாதிரி அரசு பள்ளி, கல்லுாரி அல்லது மருத்துவமனை அமைக்க பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைக்கலாம்

தனியார் கல்வி அறக்கடளையின் இன்டர்நேஷனல் பள்ளி இயங்கியதால், இந்த இடத்தில் கலையரங்கம், பேட்மின்டன், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஓடுதளம், டென்னிஸ், வாலிபால், தடகள போட்டிக்கான மைதானங்கள் உள்ளன.மிக பெரிய இடவசதி உள்ளதால், இங்கு அரசு விளையாட்டு அரங்கம் அமைத்தால் மாணவர்கள், இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்மாதிரி பள்ளியாக்க

கல்வியாளர்கள் யோசனைதிருவள்ளுர் மாவட்டம், வேப்பம்பட்டு அருகே அயத்துார் கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் முன்மாதிரி பள்ளி செயல்படுகிறது.அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே, மணிமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்திலும், அரசு உண்டு உறைவிட முன்மாதிரி பள்ளி உள்ளது.போதிய அடிப்படை வசதிகள் இப்பள்ளிகளில் இல்லாததால், பூந்தமல்லி அருகே மீட்கப்பட்டுள்ள, 25 ஏக்கர் அரசு நிலத்தில் உள்ள கட்டடங்களை பயன்படுத்தி, முன்மாதிரி பள்ளியை நடத்தலாம். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கி பயில்வதற்கு வாய்ப்பாக அமையும்.தேசிய நெடுஞ்சாலை ஓரம், பூந்தமல்லி - - ஸ்ரீபெரும்புதுார் இடையே இந்த பள்ளி அமைந்துள்ளதால், இங்கு போக்குவரத்து வசதியும் எளிதாக இருக்கும். முன்மாதிரி பள்ளியை அமைக்கலாம் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R. THIAGARAJAN
செப் 17, 2024 07:37

The honest and sincere officials must be awarded with promotion and motivate them for their honesty and loyalty to the society. Similarly those who are all failed to do so must be facing their stringent departmental actions on warfoot


புதிய வீடியோ