உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க... தனி வழி! வண்டலுார் வெளிவட்ட சாலையில் அமைகிறது

டூ - வீலர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க... தனி வழி! வண்டலுார் வெளிவட்ட சாலையில் அமைகிறது

சென்னை : வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையில், விபத்துகளை குறைக்கும் வகையில், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், சரக்கு வாகன போக்குவரத்துக்காகவும், வண்டலுார் - மீஞ்சூர் இடையே, சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இது, 62.3 கி.மீ., நீளம் உடையது. இச்சாலை வழியாக தினமும் 30,000க்கும் மேற்பட்ட கார், மினி லாரி, சரக்கு லாரி உள்ளிட்டவை சென்று வருகின்றன. இதுமட்டுமின்றி 10,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் பயணிக்கின்றன. சென்னை, எண்ணுார், காட்டுபள்ளி துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களில் சிக்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்து வருகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம், புதிய முயற்சியை கையில் எடுத்து உள்ளது.அதன்படி, பிரதான சாலையில் பயணிக்க, இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அதற்கு மாற்றாக, சர்வீஸ் சாலையில் மட்டுமே, இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது.இதன் வாயிலாக விபத்துகளால் உயிர் இழப்புகள், உடல் உறுப்புகள் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக, ஆவடி மாநகர காவல் துறையின் ஒத்துழைப்பை பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.இது குறித்து, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மற்ற சாலைகளில் ஓட்டுவது போல, இருசக்கர வாகனங்களை, சென்னை வெளிவட்ட சாலையில் இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.சர்வீஸ் சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், பிரதான சாலைக்குள் வேகமாக நுழையும்போது, கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.கனரக வாகன ஓட்டிகளுக்கு, இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழைவது தெரியாததே இதற்கு காரணம். எனவே, இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்பட உள்ளது.இதற்காக, ஆவடி மாநகர போக்குவரத்து போலீசாரிடம், பேச்சு நடந்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்களை வைத்து, சர்வீஸ் சாலையை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட உள்ளது. இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது.சர்வீஸ் சாலையில், 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்த முடியும். விரைவில், இந்த முயற்சி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

John Manohar Rajan
செப் 05, 2024 11:14

யாரும் சாலையில் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. இது புரியாத வரையில் எந்த முயற்சிக்கும் பயன் இருக்காது.


N Sasikumar Yadhav
செப் 05, 2024 10:41

இருச்சக்கர வாகன ஓட்டிகள் திருந்தாதவரை விபத்தை குறைக்க முடியாது . ஜிக்ஜாக் போட்டுக்கொண்டு ஓட்டுகிறானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை