உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மறு குடியமர்வுக்கு 2,684 அடுக்குமாடி வீடுகள் தயார் இடைத்தரகர்களை நம்ப வேண்டாமென வாரியம் எச்சரிக்கை

மறு குடியமர்வுக்கு 2,684 அடுக்குமாடி வீடுகள் தயார் இடைத்தரகர்களை நம்ப வேண்டாமென வாரியம் எச்சரிக்கை

சென்னை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 27,212 வீடுகள் உள்ளன. இந்நிலையில், 483.45 கோடி ரூபாயில், 5, 8, 10 மாடிகளில் 2,684 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிளாக்கிலும், மின்துாக்கி, தீயணைப்பு கருவி, அவசர வழி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீடும், 13 முதல் 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில், வீட்டின் தன்மையை பொறுத்து பயனாளிகள், 5.25 முதல் 6.70 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும். இந்த வீடுகள், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வாயிலாக, அடையாறு, பகிங்ஹாம் கால்வாயில் வசிப்போருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.பயனாளிகள் வழங்க வேண்டிய நிதியை, நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, வாரியத்திற்கு செலுத்தி உள்ளது. ஏற்கனவே திறப்பு விழா நடத்திய குடியிருப்புகளில், மறுக்குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள குடியிருப்புகள் ஓரிரு நாளில் திறக்க உள்ளது. அதன்பின், மறுக்குடியமர்வு பணி வேகமாக நடக்கும் என, அதிகாரிகள் கூறினர்.வாரிய குடியிருப்பு அதிகாரிகள் கூறியதாவது:புதிதாக கட்டிய வீடுகள், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த வீடுகளை காட்டி, சில இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து, 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக தெரிய வருகிறது.கடந்த 2018ம் ஆண்டு, அப்போது கட்டிய வீடுகளுக்கு போலி ஒதுக்கீடு ஆணை வழங்கி, பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. இதில், 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல், இந்த புதிய குடியிருப்புகளை காட்டி பண மோசடி செய்ய வாய்ப்புள்ளது.இதனால், வீட்டை காட்டி, 'உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் வழியாக வீடு வாங்கி தருகிறேன். அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிக்காரர்கள், இடைத்தரகர்கள் கூறினால் ஏமாறாதீர்கள். அப்படி யாராவது பணம் வாங்கி ஏமாற்றினால், போலீசில் புகார் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளி செல்வது சிரமம்!

அடையாறு ஆறு, பகிங்ஹாம் கால்வாய் கரையில் வசிப்போருக்கு, பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட உள்ளது. அவர்களின் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். 15 முதல் 20 கி.மீ., துாரம் உடைய பெரும்பாக்கத்தில் மறுக்குடியமர்வு செய்வதால், பள்ளி செல்வதில் சிரமம் ஏற்படும் என கூறப்பட்டது.இதற்கு அதிகாரிகள், 'ஏப்., மே மாதத்தில் மறுக்குடியமர்வு செய்யும் வகையில் குடியிருப்பை கட்டினோம். தேர்தல் நடத்தை விதியால், மறுக்குடியமர்வு செய்ய முடியவில்லை.இங்கு குடியேறும் குழந்தைகள் படிக்க, இங்குள்ள பள்ளிகளில் சேர்க்க வசதி ஏற்படுத்தப்படும். ஏற்கனவே படித்த பள்ளியில் படிப்பை தொடர விரும்பினால், பெரும்பாக்கத்தில் இருந்து பேருந்து வசதி செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ