புழல்:வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய பழைய குற்றவாளி உட்பட மூவர் கைதாகினர்.சென்னை புழல், வி.எம்.கே., நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 56; சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர். இவரது மனைவி ஹேமாவதி, 52, நுங்கம்பாக்கத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றுகிறார்.இவர்கள், மே 17ம் தேதி, குடும்பத்துடன் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு சென்று, 20ம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு மற்றும் பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த, 70 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 50,000 ரூபாய் ஆகியவை திருடப்பட்டது தெரிந்தது.இது குறித்து புழல் போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவத்தில் ஈடுபட்ட கொரட்டூர் அடுத்த பாடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பழைய குற்றவாளி சிவா, 21, செங்குன்றம் அடுத்த அலமாதி, எடப்பாளையத்தை சேர்ந்த தினேஷ், 21, பல்லாவரத்தை சேர்ந்த சூர்யா, 22, ஆகியோர் சிக்கினர்.அவர்களை, நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்கள் கடைகளில் அடகு வைத்திருந்த, 70 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.