உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை முட்டி தரதரவென இழுத்து சென்ற எருமை; ஜல்லிக்கட்டு களமாக மாறிவரும் சென்னை

பெண்ணை முட்டி தரதரவென இழுத்து சென்ற எருமை; ஜல்லிக்கட்டு களமாக மாறிவரும் சென்னை

சென்னை : சென்னை திருவொற்றியூரில் தறிகெட்டு ஓடிய எருமை மாடு, பெண்ணை முட்டி தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது; காப்பாற்ற முயன்றவரும் காயமடைந்தார். சென்னை திருவொற்றியூர், கிராம தெரு, அம்சா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 37; ஓட்டுனர். இவரது மனைவி மதுமதி, 33. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மதுமதி நேற்று முன்தினம் மாலை, சோமசுந்தரம் நகர் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது தறிகெட்டு ஓடி வந்த எருமை மாடு, அவரை முட்டி துாக்கியது; அந்த தெரு பகுதி முழுதும் தரதரவென இழுத்துச் சென்றது.இதை பார்த்ததும், அப்பகுதியில் இஸ்திரி கடை வைத்துள்ள சந்திரசேகர் என்பவர், அவரை காப்பாற்ற முயன்றார். அவரையும் எருமை மாடு முட்டி தள்ளியது. அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள் பதறியடித்து நாலாபுறமும் ஓடினர்.எருமையை விரட்ட முயன்றவர்களையும், 'ஜல்லிக்கட்டு காளை' போன்று ஆக்ரோஷமாக முட்ட துரத்தியது. சிலர், வீடுகளின் சுற்றுச்சுவரில் ஏறி தப்பினர். சிறிது நேர பரபரப்பிற்கு பின், ஒருவழியாக எருமை மாடு பிடிபட்டது.இந்த சம்பவத்தில், மதுமதிக்கு தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த சந்திரசேகர், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.பதைபதைக்க வைத்த இந்த சம்பவத்தின் 'சிசிடிவி' வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், வெறிநாய் கடித்ததால் எருமை மாடு மிரண்டு போய் பெண்ணை முட்டி துாக்கி, 5-0 அடி துாரத்திற்கு இழுத்துச் சென்றது என, அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரம், சிறுவர்கள் சிலர் மாட்டை விரட்டியதால், மிரண்டு போய் ஓடியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், எருமையின் உரிமையாளர் யார்; அருகே உள்ள மாட்டு மந்தையில் இருந்து வழி தவறி வந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ விலங்குகள் மனிதனுக்கு கடுமையான காயம் ஏற்படுத்துதல், மனித உயிருக்கு அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கால்நடை மற்றும் ஆக்ரோஷமான வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்பதற்கு சென்னை ஏற்ற நகரம் இல்லை என, மாநகராட்சி தொடர்ந்து கூறி வருகிறது. சென்னையில் வளர்க்கப்படும் மாடுகள் சாலையில் திரிவதும், அவை திடீரென முட்டுவதால் உயிரிழப்பு, படுகாயம் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக, மாடுகள் முட்டுவது, இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படும் சம்பவங்களால், ஜல்லிக்கட்டு களம் போல சென்னை மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

'ரேபிஸ்' பாதிப்பா?

இது குறித்து, மாநகராட்சி கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:பெண்ணை முட்டிய எருமை மாடு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது; உணவு எடுத்துக் கொள்கிறது. வெறிநோய் என்ற 'ரேபிஸ்' நோய் தாக்குதலுக்கான அறிகுறி இல்லை.தொடர்ந்து எருமை மாட்டின் நிலை குறித்து கண்காணிக்கப்படுகிறது. பிடிபட்ட எருமை மாட்டை, இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அவ்வாறு உரிமை கோரினால், போலீசில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பதாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவச் செலவை ஏற்பது போன்ற காரணங்களால், உரிமையாளர் வராமல் இருக்கலாம். ஆனாலும், அப்பகுதி மக்களிடம் விசாரித்து, மாட்டின் உரிமையாளர் அடையாளம் காணப்படுவார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகளுக்கு கடிவாளம்?

சென்னை மாநகராட்சியில் மாடு பிடிபடும்போது, முதல் முறை 5,000 ரூபாய்; இரண்டாம் முறை 10,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். மீண்டும் விதி மீறப்பட்டால் பறிமுதல் செய்யவும் அதிகாரம் உண்டு. ஆனால், மாடு பிடிபடும் போது உள்ளூர் அரசியல்வாதி, கவுன்சிலர் வாயிலாகத் தான், மாடுகளை விடுவிக்க உரிமையாளர்கள் முயற்சிக்கின்றனர். அரசியல்வாதிகளின் அழுத்தத்தால், பலமுறை பிடிபடும் மாடுகள் கூட அபராதமின்றி விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் தடுக்க முடியும்.- மாநகராட்சி அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்