உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளம் தோண்டி 20 மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட மண்டபம்

பள்ளம் தோண்டி 20 மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட மண்டபம்

கண்ணகி நகர், கண்ணகி நகரில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 240 ஏக்கர் பரப்பில், 23,704 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.இங்குள்ள 7,424 சதுர அடி பரப்பில் மண்டபம் கட்ட, 2022ல் தென்சென்னை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 1.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 5,000 சதுர அடி பரப்பில், 200 பேர் அமரக்கூடிய, இரண்டடுக்கு உடைய திருமண மண்டபம் கட்டும் பணி, 2023 ஜன., மாதம் துவங்கியது.'பேரல்' என்ற கட்டுமான நிறுவனம் பணி செய்தது. பள்ளம் தோண்டியபோது, கழிவுநீர் செல்லும் பிரதான குழாய் இருப்பது தெரிந்தது. இதை இடம் மாற்றி அமைக்க, 55 லட்சம் ரூபாய் செலவாகும் என, குடிநீர் வாரியம் கூறி உள்ளது. இதனால், குழாய்க்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அருகில் துாண்கள் எழுப்பி, கட்டுமான பணியை துவங்க வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதற்கு, கட்டுமான நிறுவனம் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. தாமதம் ஏற்பட்டதால், ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டது. இருந்தும், பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை.கட்டுமான நிறுவனத்திற்கும், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால், பள்ளம் தோண்டிய நிலையிலே உள்ளது. பகுதிமக்கள் கூறியதாவது:கண்ணகி நகரில் ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கின்றனர். வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த, ஓ.எம்.ஆரில் தனியார் மண்டபங்கள் குறைந்தது 2 லட்சம் ரூபாய் வாடகை கேட்கின்றனர். குறைந்த வாடகையில் நிகழ்ச்சி நடத்த, இந்த மண்டபம் பயன் அளிக்கும் என நம்பியிருந்தோம். குளறுபடிகளை நீக்கி, மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளத்தால், அருகில் உள்ள வீடுகளுக்கு அசம்பாவிதம் ஏற்படும் அச்சம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை