| ADDED : மே 28, 2024 12:11 AM
பள்ளிக்கரணை, வணிகக் கட்டடத்திற்கு அனுமதி கிடைக்காததால், அதற்கு காரணமாக இருப்பதாக கருதிய நபரை அரிவாளால் வெட்ட முயன்ற அ.ம.மு.க., முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக், 53. இவர், மேடவாக்கம் ஊராட்சித் தலைவருக்கு நெருங்கிய உறவினர். நேற்று முன்தினம் காலை, 6.30 மணியளவில், அசோக், தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த, அ.ம.மு.க., பரங்கிமலை கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலர் காளிதாஸ், அசோக்கை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பிய அசோக், சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காளிதாசை கைது செய்து விசாரித்தனர்.தனக்கு மேடவாக்கம், -வேளச்சேரி பிரதான சாலையில், 1700 சதுர அடியில் உள்ள மூன்றடுக்கு வணிக கட்டடத்திற்கு பஞ்சாயத்து அனுமதி பெற, அசோக் தடையாக இருப்பதால், ஆத்திரத்தில் அவரை அரிவாளை வைத்து மிரட்டியதாக விசாரணையில் காளிதாஸ் கூறினார். காளிதாஸை ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்கு நீதிமன்ற பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.