சென்னை, தரையில் விழுந்து மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தை, 1 வயது குழந்தைக்கு எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தியுள்ளனர்.கோவையைச் சேர்ந்தவர் சரவணன். அவரது 11 மாதமான பெண் குழந்தை, வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தது.அங்குள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.பின், பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். பின், இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டுள்ளன.இதில், தானமாக பெறப்பட்ட இதயம், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், 1 வயது பெண் குழந்தைக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதய நோயால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தைக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்த நிலையில், தானமாக கிடைத்துள்ளது.உடனடியாக, நேற்று முன்தினம் இரவு, டாக்டர்கள், அக்குழந்தைக்கு, 11 மாத குழந்தையின் இதயத்தை அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தியுள்ளனர்.தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.