இலவுகாத்த கிளியாக தான் பா.ஜ.,வின் கூட்டணி கனவு
சென்னை, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வடசென்னையில் நடைபெற்று வரும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஓட்டேரியில் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் இருக்கிறது. ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., களத்தில் நிற்கிறது. மக்களோடு ஒன்றிணைந்து தி.மு.க., பயணித்து வருகிறது. 2026 தேர்தலில் 234 லட்சியம். 200 நிச்சயம். தமிழகத்தில் பா.ஜ., ஏற்கனவே விரட்டப்பட்ட இயக்கம், மதத்தால், இனத்தால் பிரிவினையை உண்டாக்க நினைத்தவர்களுக்கு தமிழக மண்ணில் இடமில்லை என்பதை அறிந்த பின், மாணவர்களிடையே இடையே பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. மக்களே வெகுண்டெழுந்து புலியை முறத்தால் அடித்து விரட்டிய நிலை தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு உருவாகும்.ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி என, சொன்னார்கள். ஆனால் 2,670 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. கோவில்கள் புரனமைப்பு பணிகளுக்கு அரசு சார்பில் முதல்வர் 300 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். 340 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இலவுகாத்த கிளிபோல் கூட்டணிக்காக பா.ஜ., காத்திருக்க வேண்டியது தான். கடல் வத்தி கருவாடு திண்ணலாம் என காத்திருத்த கொக்கு, குடல் வத்தி இறந்து போகும் கதையாக தான் பா.ஜ.,வின் கனவு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.****