மூன்று மொழிகளில் 8 மணி நேரத்தில் 1,330 திருக்குறள் எழுதி சிறுவன் சாதனை
அண்ணா நகர், திருக்குறளை தேசிய நுாலாக்க வலியுறுத்தி, திருவள்ளுவரின் படம் பதிந்த 7 அடி நீள பேனரில், எட்டு மணி 23 நிமிடத்தில், மூன்று மொழிகளில், 1,330 திருக்குறளை எழுதி, 15 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.மேற்கு அண்ணா நகர், டி.வி.எஸ்., காலனியைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் ராஜஸ்ரீ தம்பதியின் மகன், ரோஹித், 14; அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். களிமண் மாடலிங், திருக்குறள் ஓதுதல், ஓவியம், அபாகஸ் போன்றவற்றில் பல்வேறு சாதனைகளை ரோஹித் படைத்துள்ளார்.இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை தேசிய நுாலாக்க வலியுறுத்தி புதிய சாதனை முயற்சியை, நேற்று முன்தினம் காலை வீட்டில் துவக்கினார்.திருவள்ளுவர் படம் பதிக்கப்பட்ட 7 அடி பேனரில், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில், 1,330 திருக்குறளை ஓவியம் போல எழுதினார். காலை, 8:20 மணிக்கு துவங்கிய சாதனை முயற்சியை, மாலை, 4:43 மணிக்கு ரோஹித் நிறைவு செய்தார்.இந்நிகழ்வை, 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' எனும் சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள், ஆன்லைனில் கண்டு சாதனையாக பதிவு செய்தனர்.இதுகுறித்து, ரோஹித் தயார் ராஜஸ்ரீ கூறுகையில், “ரோஹித் சிறுவயதில் இருந்தே, பல்வேறு சாதனை படைத்து வருகிறார். 'அபாகஸ்' எனும் கணித கணக்கீடை செய்து கொண்டே பல்வேறு வகையில், நான்கு முறை சாதனை படைத்துள்ளார். தற்போது, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருக்குறளை தேசிய நுாலாக்க வலியுறுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை தமிழகம் அரசு அங்கீகரித்து சிறுவனை உற்சாகப்படுத்த வேண்டும்,” என்றார்.