உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரோடு ரோலரில் மோதிய பஸ்: 13 பேர் காயம்

ரோடு ரோலரில் மோதிய பஸ்: 13 பேர் காயம்

எண்ணுார் :வள்ளலார் நகரில் இருந்து எண்ணுார் செல்லும் தடம் எண்: 56 மாநகர பேருந்தை, நேற்று இரவு, ஒப்பந்த ஓட்டுநர் பென்னி என்பவர் இயக்கினார். நடத்துநராக ராஜேஷ் பணியில் இருந்தார்.எண்ணுார், கத்திவாக்கம் மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, அங்கு பழுதாகி நின்ற 'ரோடு ரோலர்' வாகனத்தின் மீது, மாநகர பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.இதில், பேருந்தின் இடது புற பக்கவாட்டு பகுதி முழுதும் அப்பளம் போல் நொறுங்கி, பலத்த சேதம் ஏற்பட்டது. பயத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தப்பிவிட்டனர்.இந்த விபத்தில், மாநகர பேருந்தில் பயணித்த கல்லுாரி மாணவி சுனிதா, 19, தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தனலட்சுமி, 45, நர்கீஸ், 20, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் உட்பட 13க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அவ்வழியே சென்றோர், விபத்தில் சிக்கியோரை மீட்டு, எண்ணுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயமடைந்த மூன்று பேரும், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட திருவொற்றியூர் தி.மு.க., மேற்கு பகுதி செயலர் அருள்தாசன், 'விபத்திற்கு காரணமான, 'ரோடு ரோலர்' வாகனத்தை அகற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்' என, தன் ஆதரவாளர்களுடன் அங்கேயே முகாமிட்டிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து, எண்ணுார் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ