திருவான்மியூரில் மைதானத்துக்கு ஒதுக்கிய நிலத்தை விற்பனை செய்ய கூடாது ஐகோர்ட் கண்டிப்பு
மைதானத்துக்காக பெற்ற விலையை, வட்டியுடன், மனுதாரருக்கு திருப்பித் தர வேண்டும்சென்னை, ஆக. 25-சென்னை, திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் ஹிந்து சேவா சமாஜம் அமைப்பு, பள்ளி கட்டுவதற்காக, 1,889 சதுரமீட்டர் நிலத்தை, 1989 ல் வீட்டுவசதி வாரியம் ஒதுக்கியது. 50 சதவீத விலையில் நிலத்தை ஒதுக்கிய வாரியம், பாதி நிலத்தை விளையாட்டு மைதானத்துக்காக பயன்படுத்தவும், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த, மைதானத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவும் நிபந்தனை விதித்தது. ரூ.6.10 கோடி
மொத்த நிலத்தில், 50 சதவீத இடத்தில் பள்ளி கட்டப்பட்டது. நிலத்துக்கான 50 சதவீத விலையாக 22.33 லட்சம் ரூபாயையும் சமாஜம் செலுத்தியது. விற்பனை பத்திரத்தை வாரியத்திடம் கேட்ட போது, விளையாட்டு மைதானத்துக்காக இடத்தை ஒதுக்காமல் முழுவதையும் பயன்படுத்தியதால், சந்தை விலையாக 6.10 கோடி ரூபாயை செலுத்தும்படி வாரியம் உத்தரவிட்டது. சமாஜம் தரப்பில், 'நிபந்தனை மீறப்படவில்லை; சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டது' என கூறப்பட்டது.வீட்டுவசதி வாரியத்தின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஹிந்து சேவா சமாஜம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நிலம் விற்பனைக்கான ஆவணங்களை தரும்படியும் கோரப்பட்டது. ரத்து
மனுவை, நீதிபதி நிஷா பானு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ராஜா, வீட்டுவசதி வாரியம் தரப்பில் வழக்கறிஞர் டி.வீரசேகரன் ஆஜராகினர்.விசாரணைக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்துக்கான தொகை முழுவதையும், மனுதாரர் செலுத்தி உள்ளார். அதை, வாரியமும் உறுதி செய்துள்ளது. விளையாட்டு மைதானத்துக்கான நிலத்துக்கு, மனுதாரருக்கு உரிமை இல்லை. விற்பனை
பள்ளி கட்டுவதற்கு இடத்தை ஒதுக்கும்படி மனுதாரர் தரப்பில் கோரியதால், 1989 ல் நிலம் ஒதுக்கப்பட்டது. பாதி இடத்தை, விளையாட்டு மைதானமாக பள்ளியும், அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளும்படி நிபந்தனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்துக்கும் எப்படி விலை நிர்ணயித்து, பள்ளி நிர்வாகம் செலுத்தும்படி வீட்டுவசதி வாரியம் கோரியது என தெரியவில்லை. 6.10 கோடி ரூபாய் என விலையை உறுதி செய்த வாரியம், வட்டியுடன் சேர்த்து 13.18 கோடி ரூபாய் செலுத்தும்படி கேட்டுள்ளது. விளையாட்டு மைதானமாக ஒதுக்கிய நிலத்தை, மனுதாரருக்கு விற்க முடியாது. விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கிய நிலத்தை ரத்து செய்ய, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஒதுக்கப்படும் நிலத்தை, தனி நபர்களுக்கு விற்பனை செய்து, வேறு காரணங்களுக்கு பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது. மனுதாரருக்கு இந்த இடத்தை விற்பனை செய்தாலும், அதை விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவர் என்பதை உறுதி செய்ய முடியாது. பள்ளி விரிவாக்கத்துக்கு கூட அதை பயன்படுத்தலாம். உத்தரவு
எனவே, விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கிய நிலத்தை, அதற்காக தான் பயன்படுத்த வேண்டும். வேறு காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சுவரை அகற்றி, விளையாட்டு மைதானமாக வைத்திருக்க வேண்டும். மைதானத்துக்காக பெற்ற விலையை, வட்டியுடன், மனுதாரருக்கு திருப்பித் தர வேண்டும். பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கிய இடத்துக்கான விற்பனை பத்திரத்தை, மனுதாரருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.