காலி மனைகளில் கழிவுநீர் தேக்கம் நடவடிக்கை எடுப்பதில் சிரமம்
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஒன்பது வார்டுகளில், பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால், தொட்டி கட்டி கழிவுநீரை சேமித்து, அதை லாரியில் அகற்ற வேண்டும்.ஆனால், பல இடங்களில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வடிகால் மற்றும் திறந்தவெளி காலி இடங்களில் விடுகின்றனர்.குறிப்பாக, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி பகுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான காலி இடங்களில் கழிவுநீரை விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிப்போர், பல்வேறு சுகாதார பாதிப்புகளை சந்திக்கின்றனர்.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:காலி இடங்கள் தாழ்வாக இருந்தால், கழிவுநீர் தேங்காத வகையில் அதை மேடாக்க வேண்டியது, அந்தந்த உரிமையாளர்களின் பொறுப்பு. பல காலியிடங்களின் உரிமையாளர்கள் வெளியூர், வெளிநாடு என இருப்பதால், அவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்க முடியவில்லை. அதே பகுதியில் இருக்கும் சிலரும், கழிவுநீர் தேங்காத வகையில் இடத்தை பாதுகாப்பதில்லை. நடவடிக்கை எடுக்க முயன்றால், அரசியல்வாதிகளை அழைத்து வந்து மிரட்டுகின்றனர். சோழிங்கநல்லுாரில் தொற்று பாதிப்பு சார்ந்த நோய்கள் பரவுவது கணிசமாக குறைந்திருந்தது. சிலரின் தவறான நடவடிக்கையால், டெங்கு, மலேரியா அதிகரிக்கும் சூழல் நிலவி உள்ளது. சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.