உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திறந்து ஓராண்டான 13 மாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒப்படைக்காததால் அதிருப்தி

திறந்து ஓராண்டான 13 மாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒப்படைக்காததால் அதிருப்தி

மூலக்கொத்தளம், மூலக்கொத்தளம் சுடுகாடையொட்டி உள்ள ராம்தாஸ் நகரில், நுாற்றுக்கணக்கானோர் குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மூலக்கொத்தளம் சுடுகாடிற்கு, 35 ஏக்கர் நிலம் உள்ளது.அதில், மயானத்திற்கென 23 ஏக்கர் நிலம் போக, காலியாக இருந்த 12 ஏக்கர் நிலத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 138 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில், 13 மாடி கொண்ட, 1,044 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.கடந்த 2018ல், அ.தி.மு.க., ஆட்சியில், 138 கோடியில் துவக்கப்பட்ட இப்பணி, 2020ல் முடிந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., கட்டடத்திற்கு குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்பு வழங்காததால், வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., அனுமதி பெறப்பட்டது.குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள், மின்துாக்கி, சுற்றுச்சுவர் வசதிகள் செய்யப்பட்டன.இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின், 2023 ஜூலையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது திறக்கப்பட்ட குடியிருப்பில், தொகை அதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறி, ராமதாஸ் நகர் மக்கள் செல்ல மறுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூலகொத்தளம் நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பில் பயனாளி ஒருவருக்கு வசூலிக்கும் 4 லட்சத்து 70,000 ரூபாய்க்கு விலக்கு அளிக்க வேண்டுமெனவும், 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறினர்.இந்நிலையில், குடியிருப்புகளை திறந்து ஓராண்டாகியும், இதுவரை பயனாளிகளுக்கு ஒப்படைக்கவில்லை.எனவே, மழைக்கு முன் வீடுகளை வழங்க வேண்டுமென ராமதாஸ் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பு அதிகாரிகள் கூறியதாவது:ராயபுரம் மாநகராட்சி அதிகாரிகள், நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பு வாரிய அதிகாரிகள் தலைமையில், கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது.அதில் ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டம் பகுதியை சேர்ந்த, 355 பயனாளிகளுக்கு மட்டும், பங்களிப்பு தொகை தலா, 1.50 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய், வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள் ஆணை வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்