| ADDED : ஜூன் 07, 2024 12:28 AM
சென்னை, 'ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காமல் தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், அதில் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்' என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில், 'சில்வனஸ் பில்டர்ஸ் மற்றும் டெவலப்பர்ஸ்' நிறுவனம், குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் வீடு வாங்க கே. சுப்புலட்சுமி, கணேஷ் குமார் ஜோதி ஆகியோர், 2013ல் தனித்தனியாக ஒப்பந்தம் செய்தனர். இதில் வீட்டுக்கான விலையாக தெரிவிக்கப்பட்ட தொகையை இவர்கள் செலுத்திய நிலையில், வீட்டை ஒப்படைக்காமல் கட்டுமான நிறுவனம் தாமதம் செய்தது. கடந்த, 2015ல் ஒப்படைக்க வேண்டிய வீடுகளை, 37 மாதங்கள் தாமதமாக, 2019ல் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட நபர்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் செய்தனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால கெடுவில் கட்டுமான நிறுவனம் வீடுகளை ஒப்படைக்காதது உறுதியாகிறது. எனவே, இதில் பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் இருவருக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீட்டை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். இத்துடன் வழக்கு செலவுக்காக, மனுதாரர்கள் இருவருக்கும் தலா, 50,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.