சென்னை, துாய்மை பணி, கழிவுநீர் அகற்றும் ஊழியர்களை காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஊழியர்களை ஒப்பந்த நிறுவனங்கள், தனி மனிதர்கள் ஈடுபடுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் அகற்றினால், உரிமையாளர்கள், நலச்சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி யாராவது, ஊழியர்களை பணியில் ஈடுபட வைத்தால், சபாய் மித்ரா சுரக்க்ஷா சேலஞ்ச்' திட்டத்தில், 14420 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தெரிவிக்கலாம். கழிவுநீர் அகற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு நலன், நலத்திட்ட உதவிகள் வழங்குவதை, குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை, ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும். அனைத்து ஊழியர்களையும், காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய், பொறியியல் இயக்குனர் ஜெய்கர் ஜேசுதாஸ், தலைமை பொறியாளர் சிவமுருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.