50 ஆண்டுக்குப்பின் சந்திப்பு குதுாகலித்த முன்னாள் மாணவர்கள்
சென்னை, சென்னை அண்ணா பல்கலை, முன்பு கிண்டி பொறியியல் கல்லுாரியாக செயல்பட்டது. அப்போது, 1970 முதல் 1975ம் ஆண்டு வரை, எலட்ரிக்கல், எலட்ரானிக்ஸ், மெக்கானிக், சிவில் ஆகிய பாடப்பிரிவுகளில், 270 பேர் படித்தனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர்கள், 'கிண்டி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் - 1975' என்ற அமைப்பை உருவாக்கி, செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பின், 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு, அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 125 பேர் பங்கேற்றனர்.இவர்கள் படித்த காலத்தில், பேராசிரியராக பணி புரிந்து, 85 வயதை கடந்த கலாநிதி, சாதிக், ஜெகதீசன் ஆகியோரை, மேடையில் அமர செய்து கவுரவித்தனர்.சிலர் படித்த காலத்தில் நடந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கிண்டி பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ரூப் சந்தர், பேராசிரியர்கள் சேகர், வைதேகி விஜயகுமார் மற்றும் முன்னாள் மாணவர்களின் குடும்பத்தார் பங்கேற்றனர்.இதுகுறித்து, நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:முதலில், குழுவில் குறைவான நபர்களுடன் கலந்துரையாடினோம். கடந்த 15 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.உடல்நலன், மனநலன், குடும்ப சூழல், பொருளாதாரம் போன்றவற்றை பேசி பரிமாறி கொள்வோம். குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்கிறோம்.ஒவ்வொருவரும் பல்வேறு துறைகளில் பணி புரிந்ததால், அந்த அனுபவங்கள் இப்போதைய காலக்கட்டத்திற்கு எப்படி பயனளிக்கும் என, அரசு, தனியார் துறையினருக்கு ஆலோசனை வழங்குகிறோம். கல்விக்கு உதவுகிறோம்.பணிச்சூழல் எப்படி இருந்தாலும், உடல், மன ஆரோக்கியத்திற்கு இன்றைய தலைமுறை முக்கியத்துவம் தர வேண்டும். கல்வியும், உழைப்பும் வாழ்க்கையை மேம்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.