கிண்டி ரயிலில் கற்கள் வீச்சு வழக்கில் 3 மாணவர்கள் கைது
சென்னை, சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களுக்கும், நந்தனம் கல்லுாரி மாணவர்களுக்கும் இடையே, சமூக வலைதளமான 'இன்ஸ்டா'வில் ரீல்ஸ் பதிவிட்டது சம்பந்தமாக முன்விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.கிண்டி ரயில் நிலையம் அருகே சென்றபோது, நந்தனம் அரசு கல்லுாரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை நோக்கி கற்களை வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து, ரயில்வே போலீஸ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், நந்தனம் கல்லுாரி மாணவர்கள் யுவராஜ், 19, சூர்யா, 18, அய்யப்பன், 19 ஆகிய மூன்று பேரையும், ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.மேலும், இந்த மூன்று பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, நந்தனம் அரசு கல்லுாரி நிர்வாகத்திற்கு, மாம்பலம் ரயில்வே போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.