சென்னை:முகலிவாக்கம் - மணப்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதைகளுடன், கீழ் அடுக்கில் மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த தடத்தில், 2026ல் அனைத்து மெட்ரோ ரயில் பணிகளையும் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 61,843 கோடி ரூபாயில் 116 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடத்தில் 47 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது.மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் கூட்ரோடு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக இந்த பாதை அமைகிறது. இந்த தடத்தில் மெட்ரோ ரயில்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முகலிவாக்கம் - மணப்பாக்கம் இடையே இரண்டு அடுக்குகளாக பணி நடைபெற்று வருகிறது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் -- சோழிங்கநல்லுார் தடத்தில், மேம்பால தடத்தில் 42 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன. பெரும்பாலான ரயில் நிலையங்கள் மேம்பால பாதையில் அமைவதால், பணிகள் வேகமாக நடக்கின்றன. இந்த தடத்தில், ஏற்கனவே கட்டப்பட்ட துாண்களில், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துஉள்ளன. துாண்கள் மீது மெட்ரோ ரயில் மேம்பால பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முகலிவாக்கம் - மணப்பாக்கம் இடையே 3.2 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதைகளுடன், மேம்பாலமும் அமைகிறது. மேல்பகுதியில் மெட்ரோ ரயிலும், அதற்கு கீழ் வாகனங்கள் செல்லும் மேம்பாலமும், அதற்கும் கீழ் பகுதியில் தற்போதுள்ள சாலையும் வழக்கமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தடத்தில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வரும் 2026 ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.