2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 56 இடங்களில் இரும்பு பாலங்கள்
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 56 இரும்பு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. நெரிசல் மிக்க இடங்கள் மற்றும் மேம்பாலத்தின் மேற்பகுதிகளில் கான்கிரீட் பாலம் அமைப்பதில் சிக்கல் உள்ள இடங்களில் இப்பணிகள் நடக்கிறது. சென்னையில் அடுத்தகட்டமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - சோழிங்கநல்லுார் என மூன்று வழித்தடங்களில் 116 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2025 முதல் படிப்படியாக, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. மூன்று வழித்தடங்களையும் 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பல்வேறு இடங்களில் நெருக்கடியான கட்டிடங்கள், நெரிசல் மிக்க சந்திப்பு, மேம்பாலங்களுக்கு மேல் பகுதிகள் என, 56 இடங்களில் இரும்பு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சில பகுதிகளில் அகலமாக அல்லது நெருக்கடியான பகுதிகளில் கான்கிரிட் கட்டுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. எனவே, தேர்வு செய்யப்பட்ட 56 இடங்களில், இரும்பு பாலங்கள் அமைக்க உள்ளோம். 17 மீட்டர் முதல் 60 மீட்டர் வரை இந்த பாலங்கள் இருக்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு இரும்பு பாலமும் 150 டன்னில் அமைய உள்ளது. தெள்ளியார் அகரம், பூந்தமல்லி சந்திப்பு, வளசரவாக்கம், ஆதம்பாக்கம், ராமாபுரம் சந்திப்பு, கத்திபாரா, காளியம்மன் கோவில், பட் ரோடு, ஈச்சங்காடு, பெரும்பாக்கம், மேடவாக்கம், ரெட்டேரி, எம்.எம்.பி.டி, ஐ.சி.எப்., சிராசிங், கோயம்பேட்டில் தேசிய நெடுஞ்சாலை கிராசிங் உட்பட பல்வேறு இடங்களில் இந்த பாலங்கள் அமைக்கப்படும். போரூர், பூந்தமல்லி சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.