சென்னை:சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 111 ஆண்டு பழமை வாய்ந்தது.விபத்து உயிர் காக்கும் முதலுதவி மருத்துவமனையாக செயல்படும் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.கடந்த, 2017ம் ஆண்டு, 40 கோடி ரூபாயில் எட்டு மாடி உடைய கட்டடம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்காக, அங்கிருந்த ஓட்டு கட்டடம் இடிக்கப்பட்டது. அரசியல் தலையீட்டால், புதிய கட்டடம் கட்டுவதற்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டன.இந்நிலையில், ஆட்சி மாற்றத்தால், நுாற்றாண்டு கண்ட இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டு டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு கட்ட, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 10 கோடி ரூபாயில், 30,000 சதுர அடி பரப்பில், மூன்றடுக்கு உடைய கட்டடம் கட்டி, மார்ச் மாதம் திறக்கப்பட்டது. மீதமுள்ள, 2 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது.இந்நிலையில், கூடுதலாக 15 கோடி ரூபாய் ஒதுக்கி, ஆறு மாடி கட்டடமாக கட்டப்படுகிறது. இந்த பணி, எட்டு மாதங்களில் முடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது செயல்படும் மருத்துவமனை பழைய கட்டடத்தை இடித்து, அதில், 40 கோடி ரூபாயில், 30,000 சதுர அடி பரப்பில், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டப்பட உள்ளது.மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:பழைய கட்டடத்தை இடிக்கும் முன், புதிய கட்டடத்தில் உள்ள மூன்று மாடியில் மருத்துவமனை மாற்றப்படும். தற்போது, செங்கல்பட்டு மாவட்ட தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்து, முழு பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.