சென்னை: 'தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் கூறியபடி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்தேன்' என, வழக்கறிஞர் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என, நான்கு பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்களில், வக்கீல் ஹரிஹரன் என்பவர் அளித்துள்ள வாக்குமூலம்:எனக்கும், தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலுக்கும், 10 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. சம்போ செந்தில் விவகாரங்களில் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து குறுக்கிட்டு வந்ததால், அவர் மீது ஆத்திரத்துடன் இருந்தார். அதேபோல, ஆம்ஸ்ட்ராங் மீது மேலும் சில ரவுடிகளும் கொலைவெறியுடன் இருந்தனர். இவர்களும், சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்தனர்நான் த.மா.கா.,வில் மாணவர் அணி நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் இருந்ததால், கூலிப்படையினர் தொடர்பான வழக்குகளை எடுத்து நடத்தி வந்தேன். ரவுடி தோட்டம் சேகர் மனைவி மலர்க்கொடி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். அவரது மகனும், ரவுடியுமான அழகர் ராஜா, என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர். இதனால், மலர்க்கொடியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். ரவுடி சம்போ செந்திலுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பது மலர்க்கொடிக்கும் தெரியும். திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர், மூன்று மாதங்களுக்கு முன் மலர்க்கொடியை சந்திக்க வந்தார். அப்போது, ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட வேண்டும் என, மலர்க்கொடியிடம் கூறினார். இதை அறிந்த நான், ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் மீது கொலை வெறியுடன் இருந்த சம்போ செந்திலை சந்திக்க, அருளை அழைத்துச் சென்றேன். ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்த குழுவில் அருளும் சேர்ந்தார். தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்தில் அவ்வப்போது வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வது வழக்கம். அங்கிருந்து, 'வாட்ஸாப் கால்' வாயிலாக, என்னை தொடர்பு கொள்வதும் வழக்கம். அப்போது, 'எவ்வித சொதப்பலும் இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்க வேண்டும்' எனக்கூறி, அதற்கான இறுதித் திட்டத்தை தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்கை எந்த நேரத்தில், எப்படிக் கொல்ல வேண்டும் என்பதை கூறினார். அதன்படி, ரவுடிகள் பொன்னை பாலு, திருமலை, ராமு, வக்கீல் அருள் ஆகியோர் அடங்கிய குழுவினருக்கு, உணவு வினியோக ஊழியர்கள் போல எப்படிச் செல்ல வேண்டும், எப்படி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிச் சாய்க்க வேண்டும் போன்ற விஷயங்களுக்கு 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்தேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.