உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பகலில் ஆபீஸ் வேலை; இரவில் திருட்டு போலீசாரிடம் சிக்கிய கொள்ளை கும்பல்

பகலில் ஆபீஸ் வேலை; இரவில் திருட்டு போலீசாரிடம் சிக்கிய கொள்ளை கும்பல்

மாதவரம், மாதவரம் பால்பண்ணை எம்.எம்.டி.ஏ., காலனி, மாத்துார், கொசப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரும்பு கிடங்குகளின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, இரும்பு பொருட்கள் திருடு போவதாக மாதவரம் பால் பண்ணை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. திருடர்களை கூண்டோடு பிடிக்க, செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், மாதவரம் - மணலி செல்லும் கொசப்பூர் சாலை சந்திப்பு அருகே, 'டாடா ஏஸ்' சரக்கு வேனுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர்கள் சின்ன மாத்துாரைச் சேர்ந்த நந்தகுமார், 28, மற்றும் மணலியைச் சேர்ந்த சூர்யா, 28, என்பதும், இவர்கள் இரவு வேளையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை திருடி விற்று வந்ததும் தெரிய வந்தது.அதில் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், மேலும் சிலரை கூட்டாளிகளாக சேர்த்து கொண்டு, பூட்டி கிடக்கும் இரும்பு கடைகள் மற்றும் கிடங்குகளின் பூட்டை உடைத்து, மோட்டார்கள், அலுமினிய பொருட்கள், செம்பு கம்பிகள் மற்றும் விலையுர்ந்த பொருட்களை திருடி விற்று வந்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை ஐவரும் பங்கு போட்டு, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.சந்தேகம் வராமல் இருக்க, பெரிய நிறுவனங்களின் ஆபிசில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதாக மற்றவர்களிடம் கூறி வந்துள்ளனர்.நந்தகுமார், சூர்யா அளித்த தகவலின்படி, கொரட்டூரைச் சேர்ந்த ஜீவரத்தினம், 34, மணலியைச் சேர்ந்த செல்வம், 25, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார், 34, ஆகியோரையும் கைது செய்தனர். 'டாடா ஏஸ்' வேன் மற்றும் 2 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி