வி.ஜி.பி., கேளிக்கை நிறுவனம் ஆக்கிரமித்த நிலம் மீட்பு
சென்னை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழியாக மாற்ற 2009ல் நில எடுப்பு பணி துவக்கியது. கடந்த ஆண்டு, சாலை விரிவாக்கத்திற்காக தமிழக அரசு, 940 கோடி நிதி ஒதுக்கியது. நில எடுப்பில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான நிலங்களையும், நெடுஞ்சாலை துறை கையகப்படுத்தி வருகிறது.தற்போது, கொட்டிவாக்கம் முதல் அக்கரை வரை, நில எடுப்பு பணி முடிந்த பகுதிகளில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, வி.ஜி.பி., கேளிக்கை நிறுவனம், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்தது.இதை கண்டறிந்த அத்துறையினர், இடத்தை மீட்பதற்காக, அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை உறுதி செய்து, அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று, 160 மீ., நீளம் 4 மீ., அகலம் இருந்த தடுப்பு சுவரை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.