ஆவடி, ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் ஆவடி அரசு மருத்துவமனையை இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக, ஆவடி ராணுவ சாலை விளங்குகிறது.இந்த சாலை, 30 மீட்டர் அகலம் கொண்ட இருபுறமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி விபத்தில் சிக்கினர்.மழை காலத்தில், சாலையோரத்தில் உள்ள மண் குவியல் மற்றும் வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், பாதசாரிகள் கடும் அவதியடைந்தனர். இதனால், ஆவடி மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலை, முகம் சுளிக்கும் விதமாக காட்சி அளித்தது.எனவே, சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதன்படி, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆவடி புதிய ராணுவ சாலையை மண் தரையில்லா பகுதியாக மாற்ற அரசு முடிவெடுத்தது.இதற்கான பணிகள் கடந்த பிப்ரவரியில் துவங்கின.இத்திட்டத்தின் கீழ், ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, காமராஜர் நகர் சிக்னல் வரை, இருபுறமும் 2,952 அடி துாரம், மண் தரையில்லா பகுதியாக மாற்ற, நடைபாதையில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஆவடி நகரை அழகுபடுத்தும் இந்த பணி வரவேற்கத்தக்கது.ஆனால், இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள, 30 அடி கால்வாயை முறையாக துார்வாராமல் இந்த பணியை செய்வது, பயனற்றதாகி விடும். மேலும், இந்த நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்காமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.நடைபாதை என்பது நடைபாதை கடைகளாக மாறி விடாமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த சாலையில் உள்ள பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள், மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்துள்ளன. இந்த பணிகள் நடக்கும் போதே, அரசியல் கட்சியினர், 'ஆசி'யுடன், இரவு நேரங்களில் செருப்பு கடை, பழக்கடை என, சாலையோர வியாபாரிகள் போட்டி போட்டு நடைபாதையை ஆக்கிரமித்து வருகின்றனர். ஜெ.ஜெயக்குமார், 59.சமூக ஆர்வலர்