வியாசர்பாடி:வியாசர்பாடி, வியாசர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன், 82; ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவரது மனைவி சரோஜினி பாய், 78; ஓய்வு பெற்ற ஆசிரியை. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.கடந்த 17ம் தேதி இரவு, சரோஜினி வீட்டின் வரவேற்பறையில், மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். இதை பார்த்த நாகராஜன், தன் இளைய மகள் கலைவாணிக்கு போனில் தகவல் தெரிவித்தார்.அவர் வந்து பார்த்தபோது, சரோஜினி இறந்தது தெரியவந்தது. வியாசர்பாடி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், 'தாயின் கழுத்தில் சார்ஜர் ஒயர் சுற்றப்பட்டிருந்ததாகவும், பின் மண்டையில் அடிபட்டிருப்பதால் மரணத்தில் சந்தேகம் உள்ளது' என, கலைவாணி போலீசில் புகார் அளித்தார்.மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.இதில் போலீசாரின் பார்வை, வீட்டு வேலைக்கு வந்த கொருக்குப்பேட்டை, பாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்ற முரளி, 34, மீது திரும்பியது. அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.இதில், 'கொத்தனார் வேலை பார்க்கும் ஜீவா, சரோஜினியின் வீட்டை சுத்தம் செய்து கொடுக்க வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த வாலிபர், கத்தியைக் காட்டி சரோஜினி பாய் காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலை கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, மொபைல் போன் சார்ஜர் ஒயரால், அவரது கழுத்தை இறுக்கி கீழே தள்ளி விட்டு, காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலை பறித்து தப்பியது' தெரிய வந்தது.அவரை நேற்று காலை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.