| ADDED : ஜூன் 25, 2024 12:22 AM
கூடுவாஞ்சேரி, நந்திவரம்- - கூடுவாஞ்சேரியில், நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இது குறித்து, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தொலைபேசி வாயிலாகவும், அலுவலகத்திற்கு நேரில் வந்தும் புகார் அளித்தனர்.அப்போது, மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிவாசிகள், இரவு நேர பணியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதோடு, 150க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.கூடுவாஞ்சேரி போலீசாரும், மணிமங்கலம் உதவி கமிஷனர் ராஜபாண்டியனும், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதானம் பேசினார். பின், மின் வாரிய அதிகாரிகளிடமும் பேச்சு நடத்தினர்.இதையடுத்து, மறைமலை நகரில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பியில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றி, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின், அப்பகுதிவாசிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அடுத்த சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தது.