சென்னை, தேசிய டார்கெட் பால் - இலக்கு பந்து - சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் தமிழக அணியும், பெண்கள் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் கோப்பையை வென்றன.ராஜஸ்தான் டார்கெட் பால் அசோசியேஷன் சார்பில், தேசிய டார்கெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி, ராஜஸ்தான் மாநிலம், சிகானியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.போட்டியில், எட்டாவது பெடரேஷன் கோப்பை, மூன்றாவது சீனியர் கலப்பு பிரிவு மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் என, மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன.ஆந்திரா, பீஹார், மஹாராஷ்டிரா, ம.பி., - உ.பி., கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 17 மாநில அணிகள் பங்கேற்றன.பெடரேஷன் கோப்பையில் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும், தமிழக அணிகள் கைப்பற்றின. அதேபோல், சீனியர் கலப்பு பிரிவில், தமிழக அணி முதலிடத்தை பிடித்தது.இறுதியாக நடந்த, தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு, பீஹார் அணியை வீழ்த்தி, தமிழக அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது. மகளிர் பிரிவில், கேரளா, உ.பி., - தமிழக அணிகள், முதல் மூன்று இடங்களை பிடித்தன. நேற்று முன்தினம் சென்னை வந்த தமிழக அணிகளுக்கு, தமிழ்நாடு இலக்கு பந்து சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.