| ADDED : ஆக 22, 2024 12:46 AM
சென்னை,கொலை மிரட்டல் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கானா மாநில குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.தெலுங்கானா மாநிலம், ராமகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார் , 30. இவர் மீது 2016ம் ஆண்டு, வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ், ராமகுண்டம் மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, இவரை தேடப்படும் குற்றவாளியாக ராமகுண்டம் போலீசார் அறிவித்தனர். மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஒ.சி., எனும் 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பப்பட்டது. இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு தனியார் பயணியர் விமானம் வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். சந்திப் குமாரும் அதில் வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட் மற்றும் அரசு ஆவணங்களை பரிசோதித்த போது, இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.உடனடியாக அதிகாரிகள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தந்தனர். அவர்கள், ராமகுண்டம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் அளித்தனர். தெலுங்கானா மாநில தனிப்படை போலீசாரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் குற்றவாளியை ஒப்படைத்தனர்.