சென்னை, கூவத்தில் கட்டட கழிவுகள் கொட்டிய விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை புனரமைக்க சென்னை நிரந்தர வெள்ள தடுப்பு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சிந்தாதிரிபேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக, இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு, கூவம் ஆற்றின் கரையில், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான துாண்கள் எழுப்பப்பட உள்ளன. இந்த துாண்களை அமைப்பதற்கு, கூவம் ஆற்றினுள் துளை போடும் வாகனத்தை இறக்க வேண்டும். இதற்காக, கூவம் ஆற்றில், கட்டட இடிபாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்த நிறுவனம் கொட்டியுள்ளது. இதனால், வெள்ள காலங்களில் நீரோட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து, 'மழைக்கு முன்பாக கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கு 50 கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும்' என கோரி, நீர்வளத்துறை வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து டிபாசிட் கட்டணத்தை பெற்றுத் தர முடியாது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கறாராக கூறிவிட்டது. கட்டட இடிபாடுகளால், வெள்ளகாலங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்படும்பட்சத்தில், அதற்கு பொறுப்பேற்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, நீர்வளத்துறைக்கு உறுதிமொழி கடிதம் எழுதப்பட்டு உள்ளது.மேலும், கூவம் ஆற்றில் நீரோட்டத்திற்கு தடையாகும் வகையில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை, நீர்வளத்துறையுடன் இணைந்து அகற்றவும், தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.- ஜெ.ராதாகிருஷ்ணன்,கமிஷனர், சென்னை மாநகராட்சி
2 மீட்டர் ஆழத்திற்கு
துார்வாரும் பணிகூவம் ஆற்றில் 2 மீட்டர் ஆழத்திற்கு துார்வாரும் பணியை மேற்கொள்வதற்கு அரசிடம் 15 கோடி ரூபாயை நீர்வளத்துறை கேட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் என்ற இடத்தில் கல்லாறாக உருவாகும் கூவம் ஆறு, சென்னையில் 18 கி.மீ., பயணித்து வங்க கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பருத்திபட்டு வரை, ஆற்றில் நல்ல நீரோட்டம் உள்ளது. சென்னையில், கழிவுநீரை வெளியேற்றும் கட்டமைப்பாக கூவம் ஆறு மாறியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து வெள்ளநீர் அதிகளவில், கூவம் ஆறு வழியாக வெளியேறுகிறது. இந்த ஆற்றின் வழியாக, வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். ஆனால், ஆற்றில் மண் மற்றும் கட்டட கழிவுகள், பழைய துணிகள், மரகட்டைகள் அதிகளவில் தேங்கியுள்ளதால், நீர்கடத்தும் திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெள்ள நீர் வெளியேறுவது தாமதம் ஆவதால், சென்னையில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூவம் ஆற்றின் முகத்துவாரத்தை மேம்படுத்தும் பணிகள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. அதன்படி, ஆற்றின் முகத்துவாரத்தில் செயற்கை கற்கள் கொட்டும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதைதொடர்ந்து முகத்துவாரம் முதல் சென்னை மருத்துவ கல்லுாரி மாணவிகள் விடுதி வரை 1.50 கி.மீ., நீளத்திற்கு, 2 அடி ஆழத்திற்கு துார்வார திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு 15 கோடி ரூபாயை வழங்கும்படி, நீர்வளத்துறை வாயிலாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்பதால், அதற்குள் நிதியை பெற்று, பணிகளை துவங்க நீர்வளத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.