உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் தொட்டி அமைக்க பெருங்குடியில் கடும் எதிர்ப்பு

கழிவுநீர் தொட்டி அமைக்க பெருங்குடியில் கடும் எதிர்ப்பு

பெருங்குடி:பெருங்குடி மண்டலம், ஜல்லடியன்பேட்டையில், வாரியத்தின் சார்பில் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, ராகவேந்திரா காலனியில் உள்ள திறந்தவெளி இடத்தில் வாரியம் சார்பில், மேல்நிலை மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கீழ்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து, அவற்றில் இருந்து வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 450 குடியிருப்புகளின் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, அதே இடத்தில் 50 மீட்டர் தள்ளி, 2 லட்சம் லிட்டர் கொள்ளவுடன் கழிவு நீரேற்று தொட்டி அமைக்க, வாரியம் முடிவு செய்தது.அதில் சேகரமாகும் கழிவுநீரை, காந்தி நகரில் அமைக்கப்படும் பிரதான கழிவுநீரேற்று நிலையத்திற்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு ராகவேந்திரா காலனி குடியிருப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குடிநீர் கீழ்நிலைத் தொட்டி அருகில் கழிவுநீரேற்று சேகரிப்பு தொட்டி அமைத்தால், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படும். துர்நாற்றம் வீசும், குடிநீருடன் கழிவுநீர் கலக்கவும் வாய்ப்புள்ளதாக, அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.இதையடுத்து, குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ஜெயகர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், அப்பகுதியினருடன் நேற்று பேச்சு நடத்தினர். இத்திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என, விளக்கம் அளித்தனர். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, மாற்றிடத்தில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க கோரினர். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் தொட்டி அருகில் கழிவுநீர் தொட்டிகளை சென்னையில் கொளத்துார் உட்பட பல இடங்களில் அமைத்து உள்ளோம். அங்கெல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்கள் தெரிவித்த கருத்தை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ