கொசுவை ஒழிக்கவில்லை; துரத்துகிறார்கள்! அடையாறு மண்டல குழுவில் குற்றச்சாட்டு
அடையாறு, அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், பாஸ்கரன், மோகன்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் பேசியதாவது:கலாஷேத்ரா காலனி சாலை பிரச்னையை விரைவில் தீர்க்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடி மருந்து இல்லை.போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஈக்காட்டுத்தாங்கல் பாலத்தின் கீழ் உள்ள அணுகு சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.தரமணி குளத்தை சீரமைக்க, சி.எஸ்.ஆர்., நிதி வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் பணி நடக்கவில்லை. பல தெருக்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.அடையாறு, வேளச்சேரி, கிண்டி, கோட்டூர்புரம், திருவான்மியூர் பகுதியில், கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மருந்து அடித்து கொசுக்களை ஒழிப்பதற்கு பதில், துரத்தி விடுகின்றனர்.அதிகாரியிடம் கேட்டால் கொசு மருந்தில் வீரியம் இல்லை என்கின்றனர். கழிவுநீரை வடிகாலில் விடுவதாலும் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது.இவ்வாறு அவர்கள் பேசினர்.தொடர்ந்து, மண்டல குழு தலைவர் துரைராஜ் பேசியதாவது:மண்டலத்தில் எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதையெல்லாம் கொசு பிரச்னை பின்னுக்கு தள்ளுகிறது.கொசு தொல்லைக்கு கழிவுநீர் முக்கிய பிரச்னையாக இருப்பதால், வடிகாலில் சட்டவிரோதமாக விடும் கழிவுநீர் இணைப்பை அடைக்க, சுகாதாரத்துறை, குடிநீர் வாரியம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில், கவுன்சிலர்கள் யாரும் தலையிட மாட்டார்கள். சுதந்திரமாக செயல்படலாம். அடுத்த கூட்டத்தில், கொசு தொல்லை குறித்து புகார் கூறும் வகையில், அதிகாரிகள் நடந்து கொள்ளக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக, 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.