மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்
15-Feb-2025
ஆவடி,ஆவடி, எச்.வி.எப்., சாலையில், மத்திய அரசின் கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 14ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில், மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. இந்நிலையில், நேற்று காலை 7:00 மணியளவில் அந்த மர்ம நபரிடம் இருந்து, மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், 'அலுவலக கட்டடத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் வெடிகுண்டு இருக்கிறது; நீங்கள் சரியாக சோதனை செய்யவில்லை' என, குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வந்த மின்னஞ்சலையும் ஊழியர்கள் வழக்கம்போல காலதாமதமாக முற்பகல் 11:00 மணியளவில் தான் பார்த்துள்ளனர்.இதையடுத்த புகாரின்படி, நேற்று பிற்பகல் 3:30 வரை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் ஜான்சி உதவியுடன் அலுவலகத்தை சோதனை செய்ததில், மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தும், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், ஆவடி 'சைபர் கிரைம்' போலீசார் திணறி வருகின்றனர்.
15-Feb-2025