பிரதான சாலையில் வடிகால் பணி போக்குவரத்து முடங்கியதால் அவதி
சாலைகளில் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகள் மேற்கொள்ளும்போது, பகுதிவாசிகளின் போக்குவரத்து வசதியை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆனால், பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகள், பல இடங்களில் முறையாகவே நடக்கவில்லை. கடமைக்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், போக்குவரத்து நிறைந்த கோவிலம்பாக்கம்- - மடிப்பாக்கம் சாலையின் பிரதான வழித்தடமான அம்பேத்கர்சாலையில் பணிகள் நடக்கின்றன.ஆனால், ராஜராஜேஸ்வரி நகர் அருகே சாலையை முற்றிலும் துண்டித்து, பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாதவாறு போக்குவரத்து முடங்கியுள்ளது.பொதுவாக பள்ளம் தோண்டிய சாலையின் இடது, வலது பகுதியிலுள்ள நகர், தெருக்களின் வழியாக சுற்றி வந்தால், பாதை இருக்கும். வாகன ஓட்டிகள் சுற்றி சென்று விடுவர். ஆனால், தோண்டப்பட்ட அம்பேத்கர் சாலையில், வழித்தடமே இல்லை.இதனால் இருசக்கரவாகன ஓட்டிகள், பல கி.மீ., துாரம் தெருத்தெருவாக சென்று, வழி தெரியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.இலகுரக வாகனங்கள் அரை கி.மீ., துாரம் உள்ள மடிப்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு, 7 கி.மீ., துாரம் ரேடியல் சாலை, தாம்பரம்- - வேளச்சேரி சாலை வழியாக சுற்றிவர வேண்டி உள்ளது. சாலையை தோண்டிய ஒப்பந்ததாரர்கள், நேற்று மதியம் வரை பணியை துவக்கவே இல்லை. இதனால், சுற்றுவட்டார பகுதிவாசிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.- -நமது நிருபர்- -