ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுாரில், ராணுவத்திற்கு சொந்தமான வெள்ளானுார் -- அலமாதி பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி, வெள்ளானுார் ஊராட்சியில், முருகன் நகர், ஸ்ரீனிவாசா நகர், ஷீலா நகர், கணேஷ் நகர், சாஸ்திரி நகர் உட்பட 20 நகர்கள் உள்ளன.வெள்ளானுார் வேல்டெக் சந்திப்பில் இருந்து அலமாதி பால்பண்ணை கேட் வரை, 3.5 கி.மீ., துாரம் உடைய இந்த சாலையில், 2.5 கி.மீ., வெள்ளானுார் ஊராட்சி பகுதி வழியாக செல்கிறது. தாம்பரம் -- வண்டலுார் --- மீஞ்சூர் வெளிவட்ட சாலை பணியின்போது, கனரக வாகன போக்குவரத்து அதிகரிப்பால் சாலை சேதமடைந்தது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சேதமடைந்த சாலையில் 'வெட் மிக்ஸ்' கொட்டி சீரமைக்கப்பட்டது. ராணுவத்திற்கு சொந்தமான சாலை என்பதால், சாலையை முழுமையாக சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, வெள்ளானுார் ஊராட்சி நிர்வாகம், 13 குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் கடிதங்கள் பெற்று, ஏழு மாதங்களுக்கு முன் சி.வி.ஆர்.டி., எனும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் பேச்சு நடத்தியது.மக்களின் தேவையை கருத்தில் வைத்து, சி.வி.ஆர்.டி., நிறுவனம், இது குறித்து டில்லியில் உள்ள நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தது. அவர்கள், வெள்ளானுார் -- அலமாதி பிரதான சாலையை சீரமைக்க, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக தெரிகிறது.இந்த நிலையில், கனரக வாகனங்கள் சென்றாலும் தாங்கும் வகையில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 4.27 கோடி ரூபாய் மதிப்பீடில், தரமான தார்ச்சாலை அமைக்க, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் திட்ட மதிப்பீடு ஒன்றை தயார் செய்துள்ளது.திட்ட மதிப்பீட்டில், 33 சதவீத நிதியை திரட்ட வெள்ளானுார் ஊராட்சி நிர்வாகம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ரயில்வே கடவுப்பாதையில்
தடுமாறும் வாகனங்கள்சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில், ஆவடி அடுத்த பட்டாபிராம், எல்.சி., - 2 ரயில்வே கடவுப்பாதையில், 52.11 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது, சென்னை -- திருவள்ளூர் மார்க்கத்தில் ஒரு வழிப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இம்மாதம் மேம்பாலத்தை திறப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது.இதில், திருவள்ளூர் -- சென்னை மார்க்கத்தில், ரயில்வே பகுதியில், 100 மீட்டர் துாரத்திற்கு பணிகள் இன்னும் துவக்கப்படாமல் உள்ளது. அந்த பணிகளை செய்வதற்கு, எல்.சி., 2 ரயில்வே கடவு பாதையை மூட வேண்டும். தற்போது, ஒரு வழிப்பாதை திறக்க தாமதமாவதால், வாகன ஓட்டிகள், கடவு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கடவுப்பாதை மற்றும் அங்குள்ள சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.