மேற்கு மாம்பலம், மேற்கு மாம்பலத்தில் கட்டப்படும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பணி, நான்கு ஆண்டுகளாக இழுத்தடிப்பதால், பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.மேற்கு மாம்பலம் வாழைத்தோப்பு பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கே.கே., நகர் கோட்டம் சார்பில், கடந்த 1980ல், 454 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தரை தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட, 504 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு, இங்கு வசித்தவர்களை வெளியேற்றினர். பின், 47.41 கோடி ரூபாய் செலவில், 2020ல் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவங்கின. இப்பணிகளை, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்காமல், கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.இதனால், இந்த குடியிருப்பில் இருந்தவர்கள் தற்போது, வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அதிக வாடகை செலுத்தும் நிலையில், புதிய குடியிருப்பு கட்டுமான பணியும் இழுபறியில் உள்ளதால், பயனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வாழைத்தோப்பு குடியிருப்போர் நலச்சங்க செயலர் ரமேஷ், 45, கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக குடியிருப்பு கட்டுமான பணிகளை முடிக்காமல், இழுத்தடித்து வருகின்றனர். இதனால், வாடகை வீட்டில் தங்க வேண்டிய நிலை உள்ளது. அந்த குடியிருப்பில் வசித்த, 25 பேர் இறந்து விட்டனர். கடந்த மே மாதம் வீட்டை ஒப்படைப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த காலக்கெடு தாண்டி விட்டது. பலர் முழு பணத்தையும், சிலர் பாதி பணத்தையும் பல ஆண்டுகளுக்கு முன்பே செலுத்திவிட்டு காத்திருக்கின்றனர்.அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக எந்த பதிலும் கூறுவதில்லை. நான்கு ஆண்டுகளாக அலைந்து ஓய்ந்து விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.