உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3வது முழுமை திட்டம் நிலை என்ன? நகரமைப்பு வல்லுனர்கள் சந்தேகம்

3வது முழுமை திட்டம் நிலை என்ன? நகரமைப்பு வல்லுனர்கள் சந்தேகம்

சென்னை, 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகளின் நிலவரம், புதிராக உள்ளது' என, நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இத்திட்டம் காலாவதியாகி உள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வராதது, மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வீட்டுவசதி திட்டங்களுக்கு நிதி அளிக்க, உலக வங்கி முன்வந்தது. இத்திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்றால், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க, குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தை, சி.எம்.டி.ஏ., நியமித்தது. இந்நிறுவனம், பல்வேறு பகுதிகளில் கூட்டம் நடத்தியும், 'ஆன்லைன்' முறையிலும், 40,000 பேரிடம் கருத்து பெற்றது.பொதுமக்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்புகளை, இதில் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வல்லுனர்கள் நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு, 26 தலைப்புகள் இறுதி செய்யப்பட்டன. இந்த தலைப்புகள் அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் தயாரிக்கப்பட வேண்டும். இப்பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, உலக வங்கி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: ஒரு நகருக்கான முழுமை திட்டத்தில் மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை, நகர்மயமாக்கலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள், புதிய பொது போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ளன. இதில் ஏற்படும் வளர்ச்சியால், மக்களின் அடிப்படை வசதி தேவையும் அதிகரிக்கும். கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும் தள பரப்பு குறியீடு அதிகரித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு பகுதியிலும் குடியேறும் மக்கள் எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வுகளை கருத்தில் கொண்டு, கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.குறிப்பாக, கூடுதல் மழைநீர் வடிகால் விஷயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பாதாள சாக்கடை வசதிகள் திறனை அதிகரிப்பது, விரிவாக்க பகுதிகளில் இந்த வசதியை ஏற்படுத்துவது போன்றவற்றுக்கான திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை. புதிய முழுமை திட்டம் அமலுக்கு வர குறைந்த அவகாசமே உள்ள நிலையில், அதன் வரைவு எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை