150 ஆண்டு பழமைவாய்ந்த குளங்கள் சீரமைக்க முன்வருமா ஊரக வளர்ச்சி துறை?
சென்னை:சென்னைக்கு அருகில் உள்ள 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த குளங்களை ஊரக வளர்ச்சி துறை சீரமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் அதிகளவில் உள்ளன. நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் இவை உள்ளன.அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டம் என்ற பெயரில், 100க்கும் மேற்பட்ட ஏரிகள் சீரமைக்கப்பட்டன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள குளங்களை சீரமைப்பதற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பல குளங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது போதுமானதாக இல்லை. இம்மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டி, அழிஞ்சிவாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மூன்று குளங்கள் உள்ளது. இதில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள குளம், மேட்டு தெருவில் உள்ள குளம் 150 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு, செம்மஞ்சள் நிற பாறை கற்களை வெட்டி எடுத்து கரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்ட அதே செம்மஞ்சள் நிற பாறை கற்களை பயன்படுத்தி குளங்களின் நான்கு கரைகளிலும் பொருத்தப்பட்டு படித்துறை அமைக்கப்பட்டது.இப்பகுதி மக்களின் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் இந்த குளங்களின் நீர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நாளடைவில் குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், குளங்களில் நீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. படித்துறைகளும் சேதம் அடைந்ததால், மற்ற தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, பாசன தேவைக்காக வெட்டப்பட்ட குளந்தாங்கரை ஆலமர குளமும், பராமரிப்பின்றி சீரழிந்துள்ளது. இந்த மூன்று குளங்களையும் சீரமைத்தால், சுற்றுவட்டார நிலத்தடிநீர் மட்டம் அதிகரிக்க உதவும்.
விருது பெற்ற ஊராட்சி
இது குறித்து அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தலைவி ஆஷா கல்விநாதன் கூறியதாவது:துாய்மை பணியாளர், சுகாதாரம், கல்வி, ஜல்ஜீவன் திட்ட குடிநீர் வினியோகத்தில், மத்திய - மாநில அரசுகளின் விருதுகளை அழிஞ்சிவாக்கம் ஊராட்சி பெற்றுள்ளது.குளங்களை சீரமைக்காதது பெரும் குறையாக உள்ளது. மாநிலம் முழுதும் 5,000 குளக்கரை சீரமைக்க 500 கோடி ரூபாயை, ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், எங்களது ஊராட்சியில் உள்ள குளங்களையும் சீரமைக்க வேண்டும். இவற்றை சீரமைத்து பூங்காவும் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை, புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.