உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர பஸ் - கல்லுாரி பஸ் மோதல் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயம்

மாநகர பஸ் - கல்லுாரி பஸ் மோதல் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயம்

எண்ணுார் :மாநகர பேருந்து - தனியார் கல்லுாரி பேருந்து, நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஓட்டுநர் உட்பட, 10 பேர் காயமடைந்தனர். பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து எண்ணுார் நோக்கி, தடம் எண் 56 'எப்' மாநகர பேருந்தை ஓட்டுனர் சங்கர், 38, ஓட்டிச் சென்றார். நடத்துநர் வெங்கடேசன், 29. பேருந்தில், 30 பேர் பயணித்தனர். பேருந்து நேற்றிரவு, 9:30 மணிக்கு, எர்ணாவூரில் இருந்து எண்ணுார் நோக்கி செல்வதற்காக, கத்திவாக்கம் மேம்பாலத்தில் இடபக்கமாக ஏறிச் சென்றது. அப்போது, எதிர் திசையில், முத்துகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேருந்து வந்தது. வலபக்கமாக வேகமாக முந்திச்சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் பாபு, 50, பேருந்தை இடது பக்கமாக திருப்பினார். அப்போது, மேம்பாலத்தில் ஏறிக் கொண்டிருந்த மாநகர பேருந்தின் மீது, கல்லுாரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு பேருந்துகளின் முகப்பு முழுதும் நொறுங்கியது. இதில், மாநகர பேருந்து ஓட்டுனர் சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பயணியர் உட்பட, 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்று, எண்ணுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக இருவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேதமான பேருந்துகளை, எண்ணுார் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து, கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். கல்லுாரி பேருந்து ஓட்டுநர் பாபு தலைமறைவானார். விபத்து குறித்து எண்ணுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை