உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆலந்துாரில் 1,260 மனுக்கள்
ஆலந்துார்:ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட 160வது வார்டில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இதில், 1,260 பேர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம். இத்திட்டத்தில், 13 துறைகள், 43 சேவைகளையும் வழங்குகின்றன. இத்திட்ட முகாமை, ஆலந்துார் மண்டலத்தில், 160வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெருவில், நேற்று காலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் மனுக்களை பெற்று துவக்கி வைத்தார். இதில், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று மாலை 3:00 மணி வரை, 1,260 மனுக்கள் பெறப்பட்டன. பட்டா, சொத்து வரி பெயர் மாற்றம், குடும்ப, மருத்துவ காப்பீட்டு அட்டை, புதிய மின் இணைப்பு போன்றவை கேட்டு மனு அளித்த, 32 பேருக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, சான்றிதழ், ஆணை உத்தரவு வழங்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள், 45 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டில் உள்ள சாலிகிராமம் கே.கே., சாலையில் உள்ள திருமண மண்டபத்திலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நேற்று நடந்தது. மகளிர் உரிமை தொகைக்காக பலரும் விண்ணப்பித்தனர்.