12 வழித்தடங்களில் 55 ஏசி உட்பட 135 மின்சார பஸ்கள் சேவை துவக்கம்
சென்னை, சென்னையில், இரண்டாம் கட்டமாக, 55 'ஏசி' மின்சார பேருந்துகள் உட்பட, 135 மின்சார பேருந்துகளின் சேவையை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தி.மு.க., - எம்.பி., வில்சனின் தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கீடு செய்த, ஒரு கோடி என, 3 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, 'கலைஞர் கலையரங்கத்தை' துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த 2016ல், 16 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இக்கல்லுாரியில், 1,300 மாணவர்கள் பயில்கின்றனர். இதில், மாணவியரே அதிகம். இங்கு பயிலும் மாணவ - மாணவியரில், 75 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இதற்கு, கல்வி, விளையாட்டு, பெண்கள் மேம்பாட்டிற்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசே காரணம். பெரிய கல்லுாரிகளில் பயில்வோர் மட்டும், பெரும் நிறுவனங்களில் பணிபுரிவதில்லை. பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் பயின்ற பலரும், பெரும் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இக்கல்லுாரி மாணவர் ஆகாஷ், இந்திய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார். பெண் கல்வி முக்கியம் என்பதால், புதுமை பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பலர் பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, சென்னையில் இரண்டாம் கட்டமாக, 49.56 கோடி ரூபாய் மதிப்பில், பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையைத் திறந்து வைத்து, 233 கோடி ரூபாய் மதிப்பில், 55 புதிய 'ஏசி' பேருந்து, 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என, 135 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், எம்.பி., வில்சன், சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மேடவாக்கம் பொதுக்குழு உறுப்பினர் ரவி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
'ஏசி' மின்சார பஸ்சில் கட்டணம் எவ்வளவு?
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில், கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. ஏற்கனவே இயக்கப்படும் சொகுசு மற்றும் 'ஏசி' கட்டணத்தில் தான், தற்போதும் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, 45 கி.மீ., துாரம் செல்லும், அனைத்து 'ஏசி' மின்சார பேருந்துகளிலும், குறைந்தபட்சம், 15 ரூபாய் முதல் அதிகபட்சமாக 80 ரூபாய் வரை வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேருந்துகளின் சிறப்பம்சங்கள்
* 250 மி.மீ., உயரம் வரை, தளத்தை கீழ் இறக்கும் தொழில்நுட்ப வசதி உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் எளிதாக ஏறி, இறங்க இயலும் * எளிதாக அமரும் வகையில், இருக்கைகள் சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளன • நின்று செல்லும் பயணியருக்கு வசிதியாக, இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி, 650 மி.மீ.,க்கு பதில், 700 மி.மீ., உள்ளது.* முன்புறம், பின்புறம் என, இரு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன • ஒருமுறை மின்னேற்றம் செய்தால், 200 கி.மீ., வரை பேருந்தை இயக்கலாம்.* மாதாந்திர 2,000 ரூபாய் பயணச்சீட்டை பயன்படுத்த அனுமதி