1,350 விளம்பர தட்டிகள் தாம்பரத்தில் அகற்றம்
தாம்பரம்,தாம்பரத்தில், ஜி.எஸ்.டி.,- சாலை, தாம்பரம்- - வேளச்சேரி, தாம்பரம்- - முடிச்சூர், பல்லாவரம் -- திருநீர்மலை, பல்லாவரம்- - துரைப்பாக்கம், பல்லாவரம்- - குன்றத்துார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில், மின் கம்பங்களில் சிறிய அளவிலான விளம்பர தட்டிகளை கட்டுவதும், பேனர் வைப்பதும் தொடர்கிறது.மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அவ்வப்போது பேனர்கள் அகற்றப்பட்டாலும், பேனர்களை தாங்கும் கம்பிகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன.அதிகரித்து வரும் விளம்பர தட்டிகள் குறித்து, சில நாட்களுக்கு முன், நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவுப்படி, ஐந்து மண்டலங்களிலும் விளம்பர தட்டிகள் மற்றும் கட்டடங்களின் மேல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றும் பணி நேற்று நடந்தது.அந்த வகையில், 1,350 விளம்பர தட்டிகள், 16 ராட்சத விளம்பர பேனர்களை, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து அகற்றினர். இந்த நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.