எண்ணுாரில் மீனவர் கொலை 3 பேர் கைது
எண்ணுார்,எண்ணுாரில் தாக்கப்பட்ட மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுார், பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி சர்மிளா, 26, நான்கு நாட்களுக்கு முன் கடைக்கு சென்றபோது, குடிபோதையில் இருந்த சங்கர், 39, என்பவர், சர்மிளாவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பிரதீப், தன் நண்பர்கள் இருவருடன் சென்று, சங்கரிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சங்கரை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை கண்டறிந்த டாக்டர்கள், அதற்கான சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி சங்கர், நேற்றிரவு இறந்தார். எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து, பெரிய குப்பத்தைச் சேர்ந்த பிரதீப், 33, பிரேம், 31, குமார், 37, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.