சிறுமியிடம் சில்மிஷம் முதியவருக்கு 30 ஆண்டு
மறைமலை நகர், சென்னை, காரப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் உமாபதி, 70. இவரது வீட்டில், 2019ல் வாடகைக்கு வசித்து வந்த குடும்பத்தின் 6 வயது சிறுமிக்கு, உமாபதி தின்பண்டங்கள் கொடுப்பது வழக்கம். கடந்த 2019 டிச., 29ம் தேதி, பெற்றோர் வெளியில் சென்றபோது, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வற்புறுத்தி, பாலியல் சீண்டலில் உமாபதி ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் இதுகுறித்து சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, போக்சோ வழக்கில் உமாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இறுதி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி வாதாடினார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, 'உமாபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டதால், சிறுமியை கடத்திச் சென்றதற்கு, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.