ரூ.1.75 லட்சம் சம்பளம் தருது கும்டா வல்லுநர்களுக்கு 3வது முறை அழைப்பு
சென்னை, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமத்துக்கு, நகரமைப்பு வல்லுனரை நியமிப்பதற்கான அறிவிப்பு, மூன்றாவது முறையாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்கு வரத்து திட்டங்களை செயல்படுத்துவதில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த கும்டா என்ற போக்குவரத்து குழுமம், 2010ல் துவங்கப்பட்டது. போக்குவரத்து மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, இந்த அமைப்பு உதவி வருகிறது. அரசின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதால், ஒவ்வொரு துறையில் இருக்கும் அதிகாரிகள், அயல்பணி அடிப்படையில், கும்டாவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், குறிப்பிட்ட சில பணிகளுக்கு ஒப்பந்த முறையில் வெளியாட்களை இந்த குழுமம் நியமித்து வருகிறது. இந்நிலையில், நகரமைப்பு வல்லுனர் ஒருவரை நியமிக்க, ஓராண்டாக இக்குழுமம் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. கட்டுமான பொறியியல், கட்டட வடிவமைப்பியல் அல்லது இதற்கு இணையான பிரிவில், இளநிலை பட்டம் மற்றும் நகர்ப்புற திட்டமிடலில் முதுகலை முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற அடிப்படையிலும், மாதம், 1.75 லட்சம் ரூபாய் வரை மாதாந்திர ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கும்டா எதிர்பார்த்தபடி யாரும் இதில் தேர்வாகவில்லை. இந்நிலையில், மூன்றாவது முறையாக நகரமைப்பு வல்லுனர் தேடலில் கும்டா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கும், நகரமைப்பு வல்லுனர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், கும்டா எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நகரமைப்பு வல்லுனர் கிடைக்காதது ஏன் என, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.